"இவான் இலியிச்சின் மரணம்" - லேவ் தல்ஸ்தோய்
மிருத்யுவிலிருந்து அமிர்தத்திற்கு... மரணம் குறித்தான பயமும், அது சார்ந்த கேள்விகளும்தான் என் தேடலைத் துவக்கிய முக்கியப் புள்ளிகளாய் இருந்தன. யோசித்துப் பார்த்தால், "சுய மரணம்" கூட அல்ல, நாம் மிகுந்த பிணைப்பு கொண்டிருக்கும், அன்பு செலுத்தும்/அன்பைப் பெறும் ஒருவரின் சட்டென்ற "இல்லாமை" ஏற்படுத்தும் வெற்றிடம், தாங்க முடியாத மன அழுத்தத்தையும், அச்சூழலை நேருக்கு நேர் சந்திக்க முடியாத அதிர்வையும், சூன்யத்தையும், "இது என்ன?" என்ற கேள்வியையும், "இனிமேல் என்ன?" என்ற விரக்தியையும், அதுவரை வாழ்வைப் பற்றி, கொண்டிருந்த வரையறைகளையெல்லாம் சிரிப்பாக்கி, பொசுக்கி முற்றிலும் வேறு கோணத்தில், மாற்றுப் பாதையில் பயணப்பட வைக்கிறது. அப்பா இறந்தபோது நான் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் (அம்மா இன்னும் 30 வயதைக்கூட எட்டவில்லை). அப்போது கிராமத்தில் (மதுரை திருமங்கலம் கள்ளிக்குடி அருகே ஓடைப்பட்டி) வசித்தோம். நள்ளிரவில் அப்பாவின் உடல், மதுரை இராஜாஜி மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குக் கொண்டுவரப்பட்டபோது நானும், தம்பிகளும் வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக்கொண்டிருந்தோம். ம...