"Tulpan" (2008 Kazhak Film)
டூலிப் மலர்
தெற்கு கஜகஸ்தானின் உட்கோடி கிராமப்புறப் பகுதி. பரந்த ஸ்தெப்பி பாலை நிலம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை காய்ந்த புல்வெளிதான்; மரம், செடி கொடிகளோ, பசுமையோ கிஞ்சித்தும் இல்லாத, தூசும் புழுதியும் நிறைந்த, எப்போதும் காற்று வீசிக்கொண்டிருக்கும், அடிக்கடி சுழற்காற்றினால் மணல் வாரி வீசப்படும் வறண்ட பூமி. தண்ணீரும், காய்கறியும் அவ்வப்போது நகரிலிலிருந்து வரும் டிராக்டர் வண்டியிலிருந்துதான் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
ருஷ்யாவின் "ஷகலின்" தீவில், கடற்படையில் பயிற்சி நாட்களை முடித்துவிட்டு, கஜகஸ்தான் கிராமப்புறத்தில் வாழும் தன் அக்கா "சமல்"-ன் வீட்டிற்கு வசிப்பதற்கு வருகிறான் "அசா". சமலின் கணவர் "ஒண்டாஸ்", முதலாளி ஒருவரின் செம்மறி ஆடுகள், சில ஒட்டகங்கள், கழுதைகள், மாடுகள் கொண்ட ஒரு மந்தையின் மேய்ப்பாளர். வேலைக்காக குதிரை வைத்திருக்கிறார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள். மூத்தவன் பெகே (ரேடியோ கேட்பதில் ஆர்வம் கொண்டவன்; பேட்டரி ரேடியோவில் செய்திகள் கேட்டு அப்பாவிற்கு சொல்வான்; நல்ல ஞாபக சக்தி உடையவன்); இரண்டாவது மஹா - பாடுவதில் விருப்பமுள்ளவள்; மூன்றாவது சிறுவன் நூகா, எப்போதும் குச்சியை வைத்துக்கொண்டு குதிரையாய் நினைத்து வண்டி ஓட்டிக்கொண்டிருப்பான். அழகான குடும்பம் அவர்களுடையது.
ஒண்டாஸ் அசாவிற்கு கொஞ்சம்கூட பொறுப்பில்லை என்று நினைக்கிறான். அடிக்கடி முட்டிக்கொள்ளும் அவர்களை சமாதானப்படுத்துவதுதான் சமலிற்கு பெரும் பாடாயிருக்கிறது. அசாவிற்கு தானும் ஒண்டாஸைப்போல் ஒரு மந்தைக்கு பொறுப்பாளனாக வேண்டுமென்பது கனவு. முதலாளி, திருமணமானால் தான் மந்தை தரமுடியும் என்கிறார். அப்பாலை நிலத்தில் வீடுகளோ (தார்பாலின் போட்ட கூடாரங்கள்) பல மைல்கள் தள்ளித் தள்ளித்தான் இருக்கின்றன. சில மைல்கள் தொலைவில், ஒரு வீட்டில் திருமண வயதில் பெண்ணிருப்பதாக கேள்விப்பட்டு அசாவும், அவன் நண்பன் "போனி"-யும், ஒண்டாஸும் பெண் பார்த்து நிச்சயிக்கச் செல்கிறார்கள்.
பெண் வீட்டில், "டுல்பான்" திரை மறைவிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறாள். ஒண்டாஸ், திருமணத்திற்கு சீதனமாக பெண்ணுக்கு ஒரு விலையுயர்ந்த சாண்ட்லியர் விளக்கும், 10 செம்மறி ஆடுகளும் தருவதாகச் சொல்கிறார். டுல்பானுக்கு திருமணத்தில் இஷ்டமில்லை; நகரத்தில் கல்லூரி சென்று படிக்க வேண்டும் என்பது அவளின் ஆசை. அசாவின் காதுகள் பெரிதாக இருக்கின்றன, தனக்கு அவனைப் பிடிக்கவில்லை என்று சொல்லிவிடுகிறாள் டுல்பான். தோல்வியோடு திரும்புகிறார்கள் ஒண்டாஸும், அசாவும், போனியும். சுற்று வட்டாரத்தில் திருமணத்திற்கு வேறு பெண் வேறு இல்லை. டுல்பானின் மனதைக் கவர அசா எடுக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன.
இறுதியில் அசாவின் கனவு என்ன ஆனது?...
***
கஜகஸ்தான் கிராமப் புறத்தின் அப் பாலை ஸ்தெப்பி நிலப்பரப்பை முதன்முதலாக திரையில் பார்க்கிறேன். அந்நிலப்பரப்பையும், சமலின் குடும்பத்தையும், மேற்குலக நாகரிகத்தின் மேல் விருப்பம் கொண்ட, உற்சாகம் மிக்க இளைஞன், அசாவின் நண்பன் போனியையும், தன் இருசக்கர வாகனத்தின் சைடு கேபினில் காயமடைந்த குழந்தை ஒட்டகத்தை ஏற்றிச் செல்லும் கால்நடை மருத்துவரையும் மனதிற்கு மிகவும் பிடித்துப் போனது. சமலாக "சமல் யெஸ்லியமோவா" சிறப்பாக நடித்திருந்தார். மூன்றாவது குழந்தை சிறுவன் நூகாவாக "Nurghigit" அட்டகாசம்.
சமலின் பெண் மஹா பாடும் கஜகஸ்தானின் நாட்டுப்புறப் பாடல்களும், ஓரிரவில் குழந்தைகளைத் தூங்க வைக்க சமல் பாடும் தாலாட்டுப் பாடலும் அத்தனை இனிமை!. பல வருடங்களுக்கு முன், மியூசிக் டுடே வெளியிட்ட, தபேலா மேதை பண்டிட் ஜாகிர் ஹுசேன் கம்போஸ் செய்த, அதன் ஒவ்வொரு இசைத் துணுக்கும் இன்னும் நினைவிலிருக்கும், இசை ஆல்பம் "Music of Deserts"-ன் இசைக் கோர்வையை "Tulpan"-ல், காட்சிகளாய் தரிசிப்பது போல் இருந்தது. வெண்ணெய் எடுக்கப் பயன்படும் நீண்ட சிலிண்டர் வடிவப் பத்திரம் உட்பட, சமலின் வீடு முழுவதும் நுட்பமாக வடிவமைக்கப்பட்ட கலையாக்கம்.
"Tulpan" - இதயம் தொடும் ஒரு அபாரமான படைப்பு. கஜகஸ்தானின் கிராமப்புற ஸ்தெப்பி பாலை நிலப்பரப்பின் ஒரு வாழ்வியலை உயிரோட்டமாய், மனதிற்கு மிக அண்மையாய் திரையில் கொண்டுவந்திருக்கிறார் இயக்குனர் "Sergey Dvortsevoy". தவற விடக்கூடாத படம். முன்பொரு முறை, ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது விஜய் சேதுபதி இப்படத்தைப்பற்றி குறிப்பிட்டதாக நண்பர் சிவா சொன்னார்.
2008-ல் கோவாவில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரை விழாவில் திரையிடப்பட்டு, சிறந்த படத்திற்கான "தங்க மயில்" விருது வென்றது உட்பட (நிறைவு விழாவில் கமல்ஹாசன், "செர்கே"-க்கு இவ்விருதை வழங்கியிருக்கிறார்), பல நாடுகளின் சர்வதேச திரை விழாக்களில் கலந்து கொண்டு எட்டு விருதுகள் பெற்றிருக்கிறது "Tulpan".
"Tulpan" - கி.ரா அய்யாவின் சிறுகதை/குறுநாவல் ஒன்றின் அழகியல்.
வெங்கி
"Tulpan" (2008 Kazhak Film)
Sergey Dvortsevoy
Comments
Post a Comment