"Parinayam" (1994 Malayalam film)

உண்ணிமாயாவின் ஸ்மார்த்தவிசாரம்

எம்.டி. வாசுதேவன் நாயர் எழுதி, பாம்பே ரவியின் பாடல்களுடன், ஜான்சன் மாஸ்டரின் பின்னணி இசையமைப்பில், ஹரிஹரன் இயக்கத்தில் 1994-ல் வெளிவந்த படம் "பரிணயம்". நான்கு தேசிய திரை விருதுகளும் (சிறந்த படம், சிறந்த இசை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த திரைக்கதை), ஐந்து கேரள மாநில திரை விருதுகளும், இரண்டு ஃபிலிம்ஃபேர் விருதுகளும் பெற்றிருக்கிறது. வழக்கம் போல் ராகங்களின் அடிப்படையில் அமைந்த பாம்பே ரவியின் பாடல்கள் அனைத்தும் மிக இனிமை (ஜேசுதாஸும், சித்ராவும் பாடியிருக்கிறார்கள்).

***

படித்த இளம்பெண்ணான "கிழக்கேடத்து" உண்ணிமாயா, தன் குடும்ப பொருளாதார சூழல் காரணமாக, 60 வயதைக் கடந்த செல்வந்தரான "பாலக்குந்நத்து" நம்பூதிரிக்கு நான்காம் மனைவியாக திருமணம் செய்துவைக்கப்பட்டு அந்த வீட்டிற்கு வருகிறாள். பழமையான சமூகச் சடங்குகளில் ஊறிய அவ்வீட்டின் ஆசாரங்களுடனும், நடைமுறைகளுடனும் ஒன்ற முடியாமல் சிரமப்படுகிறாள். நம்பூதிரியின் மற்றொரு மனைவியின் மகனான இளைஞன் குஞ்ஞுண்ணி முற்போக்கு சிந்தனைகள் கொண்டவன். நம்பூதிரி சமூகத்தில் நடைமுறையில் இருக்கும் பழங்கால மூடச் சடங்குகளுக்கெதிராக எப்போதும் கலகக்குரல் எழுப்பி வருபவன்.

சில நாட்களிலேயே, நம்பூதிரி, திடீரென்று உடல்நிலை மோசமாகி இறந்துவிட, இளம் உண்ணிமாயா விதவையாகிறாள். அச்சமூகத்தில் பெண் விதவையானாலே அவள் வாழ்வு முடிந்தது போல்தான்; விஷேஷங்களிலும், உற்சவங்களிலும் கலந்து கொள்ளக் கூடாது; வெள்ளை சேலை உடுத்தி பெரும்பாலும் வீட்டிற்குள்ளேயே அடங்கி கிடக்கவேண்டும்; வெளியில் மற்றவர்கள் முன் நடமாடக் கூடாது...என்று ஏகப்பட்ட கட்டுப்பாடுகளின் விலங்குகள் உண்ணிமாயாவைச் சுற்றுகின்றன. அவளின் நிலையை நினைத்து குஞ்ஞுண்ணி மிகவும் வருந்துகிறான்.

மாதவன் வளர்ந்துவரும் ஒரு கதகளிக் கலைஞன். உண்ணிமாயாவின் அப்பாவிடம் கதகளி வகுப்புகளுக்குச் சென்றிருக்கிறான். தற்போது அவனே ஆரம்ப நிலை மாணவர்களுக்குச் சொல்லித் தருகிறான். அவனுக்கு உண்ணிமாயாவின் மேல் முன்பிருந்தே மெல்லிய காதலுண்டு. மாதவனின் சகோதரி குஞ்ஞுண்ணியைக் காதலிக்கிறாள். இப்போது, மாதவன், உண்ணிமாயாவிடம் அவள் வெளியில் வரும் சில சமயங்களில் (கோவிலுக்கு), கதகளி சம்பந்தமாக உரையாடும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொள்கிறான். ஒருமுறை உண்ணிமாயா வீட்டருகில் கதகளி நிகழ்ச்சி நடக்கிறது. மாதவன் நடிக்கிறான். மாடி ஜன்னலிலிருந்து உண்ணிமாயா பார்த்துக் கொண்டிருக்கிறாள். கதகளி நிகழ்வின் நாட்களில் ஓரிரவு, மாதவன் கதகளி பாத்திரத்தின் வேஷத்துடனேயே யாருக்கும் தெரியாமல் வீட்டிற்குள் நுழைய, மாதவனுக்கும் உண்ணிமாயாவிற்குமிடையே கூடல் நிகழ்கிறது.

உண்ணிமாயா தாய்மையுறுகிறாள். விஷயம் தீயாய் பரவி அச்சமூகத்திற்கு அதிர்ச்சியையும், பெரும் கொந்தளிப்பையும் உண்டாக்குகிறது. "மூத்தேடத்து பட்டதிரி" தலைமையில் பெருந்தலைகள் ஒன்று கூடி குழு அமைத்து, உண்ணிமாயாவை "ஸ்மார்த்தவிசாரம்" செய்து சமூகத்தை விட்டு விலக்கி வைக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறது. மாதவன் தன்னை காப்பான் என்று உண்ணிமாயா நம்பியிருக்க, விசாரத்தில் குழந்தைக்கு அப்பா தானென்று தயவுசெய்து சொல்லிவிட வேண்டாமென்று கோழையான மாதவன் உண்ணிமாயாவிடம் கெஞ்சுகிறான். விசாரத்தில் குழந்தையின் அப்பா யாரென்று சொல்லாததால், உண்ணிமாயாவை தாசி என்று முடிவுசெய்து அவளை சமூகத்தை விட்டு விலக்குகிறது நம்பூதிரி குழு.

அவளுக்கு தன் வீட்டில் புகலிடம் தரும் குஞ்ஞுண்ணியையும், தங்களின் "யோகசேம முன்னேற்ற சபா"விலிருந்து நீக்குகிறது அதன் மேல்மட்ட குழு. மனம் திருந்தும் மாதவன், தன் தங்கையுடன் குஞ்ஞுண்ணி வீட்டிற்குச் சென்று தன் மனம் இப்போது தெளிவாகி விட்டதாகவும், தான்தான் குழந்தையின் அப்பா என்று ஒத்துக் கொள்வதாகவும், எங்கும் சொல்லத் தயாராக இருப்பதாகவும் சொல்கிறான். குஞ்ஞுண்ணி சந்தோஷப்படுகிறான்.

ஆனால் உண்ணிமாயா எடுக்கும் முடிவு...

***

படத்தில் அபாரமான கிளைச் சிறுகதை ஒன்றிருக்கிறது; கதகளிக் கலைஞன் கோவிந்தேட்டனுடையது. தன் குடிப்பழக்கத்தால் 35 வருடங்களாக எந்த கதகளிக் குழுவிலும் வேஷம் கிடைக்காத கோவிந்தன், அப்புண்ணி ஆசிரியரிடம் சென்று, தனக்கு ஏதேனும் சிறு வேஷமாவது தருமாறு (இந்திரன், புஷ்கரன் போன்று) கெஞ்சும் இடம். ஸ்மார்த்தவிசாரக் குழுவின் உணவுக்கூடக் காட்சிகள் ("சுத்த போஜனம்" என்றழைக்கப்பட்டது), விஷ்ணுபுரம் நாவலின் ஊட்டுபுரைக் காட்சிகளை நினைவுபடுத்தி புன்னகைக்க வைத்தன.

"ஸ்மார்த்தவிசாரம்" பற்றி அறிய வேண்டுமென்றால், 1905-ல், திருவிதாங்கூரில் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் நடந்த, தலப்பள்ளி கல்பகச்சேரி இல்லத்தின் பிரபலமான "குறியேடத்து தாத்ரி" (சாவித்ரி)-யின் ஸ்மார்த்தவிசார வழக்கைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் (விக்கியில் இருக்கிறது). தாத்ரிக் குட்டியின் வழக்கு அக்காலத்தில் புயலைக் கிளப்பிய ஒன்று. எம்.டி., இச்சம்பவத்தின் அடிப்படையில்தான், இதனை மாற்றி "பரிணய"த்தின் திரைக்கதையை எழுதினார். படத்தில் தாத்ரி வழக்கின் குறிப்பும் ஒரு உரையாடலில் வருகிறது.

***

நளனும், அர்ஜுனனும், பீமனும் சாட்சியாய்...

வெங்கி

"Parinayam" (1994 Malayalam film)
M.T. Vasudevan Nair
Hariharan

Comments

Popular posts from this blog

"இவான் இலியிச்சின் மரணம்" - லேவ் தல்ஸ்தோய்

"கோயில் யானை" (நாடகம்) - ஓம்சேரி என்.என். பிள்ளை

"பிறப்பு" (நாவல்) - யு.ஆர். அனந்தமூர்த்தி