"The Banshees of Inisherin" (2022 Irish film)
இருவர் படத்திற்குள் நுழைவதற்கு முன், அயர்லாந்தின் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றியும், அதன் உள்நாட்டுப் போரைப் பற்றியும் கொஞ்சமாய் நாம் அறிந்து கொள்ளலாம்; படத்தைப் புரிந்துகொள்வதற்கு மேலும் அது உதவக்கூடும். அயர்லாந்தின் சுதந்திரப் போராட்டத்தில், பிரிட்டிஷ் படைகளுக்கும், உள்நாட்டு ஐ.ஆர்.ஏ துருப்புகளுக்கும் இடையில், 1919-ல் துவங்கிய கொரில்லா போர், 1921-ல் "ஆங்கில-ஐரிஷ்" ஒப்பந்தம் உருவான போது முடிவுக்கு வந்தது. ஒப்பந்தத்தின் சாரம், "அயர்லாந்து ஒரு தற்காலிக சுதந்திர அரசை அமைத்துக் கொள்ளலாம்; ஆனால் அது இன்னும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் கீழ்தான் செயல்பட்டு வரும்" என்பது. ஐ.ஆர்.ஏ ("Irish Republican Army") அந்த ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்தது. தங்களுக்கு முழு குடியரசு சுதந்திரம் வேண்டுமென்பது அவர்கள் கோரிக்கை. அந்த ஒப்பந்தம் ஐரிஷ் சமூகத்தையே இரண்டாகப் பிரித்தது. பாதிப்பேர் ஒப்பந்தத்தை ஆதரித்தார்கள்; பாதிப்பேர் எதிர்த்தார்கள். தற்காலிக சுதந்திர அரசு அமைக்கப்பட்டதும், 1922-ல் உள்நாட்டுப் போர் வெடித்தது. இப்போது சண்டை உள்ளுக்குள்; ஒப்பந்தத்தின்படி உருவான அரசுக்கும்...