"The Banshees of Inisherin" (2022 Irish film)

இருவர்


படத்திற்குள் நுழைவதற்கு முன், அயர்லாந்தின் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றியும், அதன் உள்நாட்டுப் போரைப் பற்றியும் கொஞ்சமாய் நாம் அறிந்து கொள்ளலாம்; படத்தைப் புரிந்துகொள்வதற்கு மேலும் அது உதவக்கூடும். அயர்லாந்தின் சுதந்திரப் போராட்டத்தில், பிரிட்டிஷ் படைகளுக்கும், உள்நாட்டு ஐ.ஆர்.ஏ துருப்புகளுக்கும் இடையில், 1919-ல் துவங்கிய  கொரில்லா போர்,  1921-ல் "ஆங்கில-ஐரிஷ்" ஒப்பந்தம் உருவான போது முடிவுக்கு வந்தது. ஒப்பந்தத்தின் சாரம், "அயர்லாந்து ஒரு தற்காலிக சுதந்திர அரசை அமைத்துக் கொள்ளலாம்; ஆனால் அது இன்னும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் கீழ்தான் செயல்பட்டு வரும்" என்பது. ஐ.ஆர்.ஏ ("Irish Republican Army") அந்த ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்தது. தங்களுக்கு முழு குடியரசு சுதந்திரம் வேண்டுமென்பது அவர்கள் கோரிக்கை. அந்த ஒப்பந்தம் ஐரிஷ் சமூகத்தையே இரண்டாகப் பிரித்தது. பாதிப்பேர் ஒப்பந்தத்தை ஆதரித்தார்கள்; பாதிப்பேர் எதிர்த்தார்கள். தற்காலிக சுதந்திர அரசு அமைக்கப்பட்டதும், 1922-ல் உள்நாட்டுப் போர் வெடித்தது. இப்போது சண்டை உள்ளுக்குள்; ஒப்பந்தத்தின்படி உருவான அரசுக்கும், அதை எதிர்க்கும் ஐ.ஆர்.ஏ-விற்கும் இடையே. 


பிரிட்டிஷ் அரசு, தாங்கள் உருவாக்கிய ஒப்பந்தத்தை ஆதரித்து உருவான அயர்லாந்தின் தற்காலிக அரசுக்கு, அதன் உள்நாட்டுப் போரில் ஐ.ஆர்.ஏ-வை நசுக்க தாராளமாக போர் ஆயுதங்கள் வழங்கியது. அயர்லாந்தின் முந்தைய சுதந்திரப் போராட்டத்தை விட அதிகமான மக்கள், இந்த உள்நாட்டுப் போரில் இறந்ததாக வரலாறு தெரிவிக்கிறது. மேலும் அப்போது உருவான சமுதாயப் பிளவும், முரண்களும், கசப்பும், மன விலகல்களும் தலைமுறைகளாக தொடர்ந்ததாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். 1937-ல் "அயர்லாந்து" என்று பெயரிடப்பட்டு, அரசியலமைப்பின் படி அதற்கு ஜனாதிபதி நியமிக்கப்பட்டாலும், 1949-ல்தான் அயர்லாந்து குடியரசு நாடாக முறையாக அறிவிக்கப்பட்டது. இப்போதும் வடக்கு அயர்லாந்து தனியாக பிரிட்டனின் ஆளுகைக்குக் கீழ்தான் இருக்கிறது.


***


1923. அயர்லாந்தின் பல தீவுகளில் ஒன்றான, இயற்கை எழில் கொஞ்சும் சிறிய "இனிஷெரின்" தீவு. தீவின் ஜனத்தொகை மிகச் சொற்பம்தான். எல்லோரையும் எல்லோரும் அறிவார்கள். "பேட்ரைக்" தன் சகோதரி "ஷ்யோபன்"-னுடன் கடற்கரையோரம் குன்றில் ஒரு சிறிய வீட்டில் வசிக்கிறான். பால் மாடுகள் வைத்து பால் வியாபாரம் செய்வதில் கிடைக்கும் பணத்தில் வாழ்க்கை ஓடுகிறது. "ஜென்னி" எனும் சிறிய கழுதையை வீட்டில் அன்பாக வளர்த்து வருகிறான். "பேட்ரைக்"கும் "காம்"-ம் பல வருடங்களாக நெருங்கிய நண்பர்கள். "காம்", "நாட்டுப்புற இசை"க் குறிப்புகள் எழுதி இசைக்கும் ஒரு வயலின் கலைஞன்; "ஷம்மி" எனும் நாய் அவன் கூட்டாளி.


அச்சிறிய தீவின் போலீஸ் கமிசனர் "பீடர்". பீடரின் மகன் இளைஞன் டொமினிக். இத்தனை வளர்ந்த பையனையும், பீடர் அடிக்கடி அடித்துத் துன்புறுத்துவது வழக்கம். டொமினிக்கிற்கு பேட்ரைக்கின் சகோதரி ஷ்யோபன் மேல் மெல்லிய காதலுண்டு. மலையுச்சியில் தனி வீட்டில் வயதான கிழவி திருமதி மெக்-கார்மிக் வசிக்கிறாள். அவளுக்கு ஆரூடம் சொல்லத் தெரியும். தீவில் புனித தாமஸ் பேராலயம் ஒன்றிருக்கிறது. கேளிக்கைக்காகவும், ஓய்வு நேரத்தில் மக்கள் கூடிப் பேசிக் கொண்டிருக்கவும் "ஜெ. ஜெ. டிவைன்" எனும் Pub இருக்கிறது.


காம், பேட்ரைக்குடனான தன் நட்பை திடீரென்று ஒருநாள் முறித்துக் கொள்கிறான். அவன் பேட்ரைக்கிடம் பேசுவது கூட இல்லை. பேட்ரைக் அதற்கான காரணம் என்னவென்று தெரியாமல் வருத்தப்படுகிறான். காம், "இனிஷெரினின் இறுதி கீதங்கள்" என்றொரு இசைத் தொகுப்பை எழுதிக் கொண்டிருக்கிறான். காம்-ற்கு, மொசார்ட் போன்ற பெரிய இசை மேதைகளைப் போல், வரலாற்றில் தவிர்க்க முடியாத பிரபலமான பெயராக, தானும் ஏதேனும் சாதித்து, தன் பெயரும் நிலைக்க வேண்டும் என்ற விருப்பம். அதற்கு பேட்ரைக்குடனான நட்பு தடையாக இருக்குமென்று நினைக்கிறான். பேட்ரைக் "நல்லவன்"தான் என்றாலும், படைப்பூக்கமில்லாத ஒரு மந்தமான மனிதன் என்பது காம்-ன் கணிப்பு.


நட்பைப் புதுப்பிக்க பேட்ரைட் எடுக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன; சில விபரீதங்களுக்கும் இட்டுச் செல்கின்றன. ஷ்யோபன், நகரில் நூலகர் வேலை கிடைத்து கிளம்பிச் செல்கிறாள். பேட்ரைக்கை வழியில் சந்திக்கும் ஜோசியக் கிழவி திருமதி மெக்-கார்மிக், தீவில் விரைவில் இரண்டு மரணங்கள் நடக்கும் என்கிறாள். எதிர்பாராத விதமாக, காம்-ன் ஒரு செயலால், பேட்ரைக்கின் பிரிய கழுதை ஜென்னி இறந்துவிட, பேட்ரைக் மிகுந்த கோபமடைகிறான். காம்-ன் வீட்டிற்கு பேட்ரைக் தீ வைக்கிறான்.


***    


தனிப்பட்ட முறையில் படத்தின் குறியீடுகள் எனக்கு அபாரமான காணனுபத்தைத் தந்தன. இது காம்-பேட்ரைக்கின் கதை மட்டுமல்ல; வாழ்வின் இரண்டு வகை மனப் போக்குகளின்/பார்வைகளின்/கருத்துருவாக்கங்களின் ஊடுபாவுகள் மற்றும் அதன் சிக்கல்கள்/ முரண்களின் பயணக் கதையும் கூட. இறுதிக் காட்சியில் கடற்கரையில் பேசிப் பிரியும் காம்-ஐயும், பேட்ரைக்கையும் உயரத்தில் குன்றிலிருந்து பார்த்தவாறு அமர்ந்திருக்கிறாள் கிழவி திருமதி மெக்-கார்மிக். அப்பார்வையின் பின்னிருப்பது காலமா, விதியா, கடவுளா, பேரிருப்பா...ஏதோ ஒன்று!. என்ன பெயரிட்டால் என்ன?. 
 

சிறப்பான ஒளிப்பதிவு ("Ben Davis"). கண்களில் ஒற்றிக்கொள்ள வைக்கும் அட்டகாசமான ஃப்ரேம்கள். படத்தில் வரும் நிலப்பரப்புகளான அயர்லாந்தின் "அரன் தீவு"-களில் பெரியதான "இனிஸ் மோர்" தீவு, மேயோ மாகாணத்திற்குட்பட்ட "அசில்" (Achill) தீவின் க்ளோமோர், கார்ரிமோர் ஏரி, "கீம் பே", சிறிய "பர்டீன்" துறைமுகம், சிலீவ்மோர் மலைக்கருகில் டுகார்ட் கிராமத்தின் புனித தாமஸ் தேவாலயம்... அனைத்துமே வெகு அழகான இடங்கள். பிரமாதமான பின்னணி இசை ("Carter Burwell"). "பேட்ரைக்"காக நடித்த "Colin Farrel"-ன் நடிப்பும், "ஷ்யோபி"னாக நடித்த "Kerry Condon"-ன் நடிப்பும் எனக்கு மிகப் பிடித்திருந்தது. இளைஞன் "டொமினிக்"காக நடித்த "Barry Koeghan"-ம் சிறப்பாக நடித்திருந்தார்.


"The Banshees of Inisherin", முதன் முதலாகத் திரையிடப்பட்ட வெனிஸ் சர்வதேச திரை விழாவிலேயே இரண்டு விருதுகள் பெற்றிருந்தது. இதுதவிர மூன்று கோல்டன் குளோப் விருதுகளையும், நான்கு பாஃப்டா விருதுகளையும் வென்றிருக்கிறது. இந்த ஆண்டு ஆஸ்கார் நாமினேஷன் பட்டியலில் ஒன்பது பிரிவுகளில் இடம்பெற்றிருக்கிறது. அடுத்த மாத ஆஸ்கார் விழாவில், "The Banshees of Inisherin"-ம், "All Quiet on the Western Front"-ம் அதிக விருதுகளை வெல்லும் என்பது என் எதிர்பார்ப்பு; என் தனிப்பட்ட ஆசையும் கூட. பார்ப்போம்.


வெங்கி

"The Banshees of Inisherin" (2022 Irish film)
Martin McDonagh

Comments

Popular posts from this blog

"இவான் இலியிச்சின் மரணம்" - லேவ் தல்ஸ்தோய்

"கோயில் யானை" (நாடகம்) - ஓம்சேரி என்.என். பிள்ளை

"பிறப்பு" (நாவல்) - யு.ஆர். அனந்தமூர்த்தி