"All Quiet on the Western Front" (2022 German film)

பொய்க் கற்பிதங்களும் போர் முனையும்...


1914 ஜூலையில் முதல் உலகப் போர் துவங்கி, ஆகஸ்ட்-ல் தீவிரமாகி, வெடித்துப் பரவியபோது, ஜெர்மன் ராணுவம், லக்சம்பர்க், பெல்ஜியம் வழியாக ஊடுருவி ஃப்ரான்சிற்குள் நுழைந்து அதன் முக்கிய தொழில் பகுதிகளை கைப்பற்றி முன்னேறியது. ஃப்ரான்ஸ் படையின் ராணுவம், மர்னே ஆற்றுப் பள்ளத்தாக்கிலும், அய்ஸ்னேயிலும் கடும் போர் புரிந்து ஜெர்மன் ராணுவத்தை தடுத்து நிறுத்தியது. இரண்டு படைகளுக்கும் இடையே சில நூறு மீட்டர்கள் நிலம். இருதரப்பும் முன்னேற முடியாமல் போக, இரண்டு ராணுவமும் அதனதன் பகுதியில், பல் கிலோமீட்டர்களுக்கு நீளமான அகழி ஏற்படுத்தி அதனுள்ளிருந்து தாக்குதல்களைத் தொடர்ந்தார்கள். ஜெர்மன் ராணுவம், வடக்கு கடலிலிருந்து, ஸ்விஸ் முனை வரை கிட்டத்தட்ட 760 கிலோமீட்டர்கள் நீளத்திற்கு அகழி அமைத்தது. முதல் உலகப்போரின் "மேற்கு முனை" உருவாக்கப்பட்டது.


1917. மூன்று வருடங்களாக போர் இன்னும் நடந்துகொண்டிருந்தது. இரண்டு பக்கமும் மில்லியன் கணக்கில் உயிர்க்கொலைகள். காணச் சகிக்காத கொடூரங்கள். கனவிலும் நினைத்துப் பார்க்காத கடும் குரூரங்களும், சேதங்களும். விஷ வாயு, விதவிதமான புதிதாகத் தயாரிக்கப்பட்ட ராணுவ ஆயுதங்கள், தளவாடங்கள் என அனைத்துமே போரில் உபயோகப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தன. போர்ச் சூழலில், அந்நிலப்பரப்பில், மனிதம் இறந்து எதிர்மறைச் சூறாவளி வீசிக்கொண்டிருந்தது. மேற்கு முனையில் குவியல் குவியலாக ராணுவப் படையினர் செத்துக்கொண்டிருந்தார்கள். இறந்தவர்களது உடுப்புகள் அகற்றப்பட்டு, சலவை செய்யப்பட்டு, தைக்கப்பட்டு, அயர்ன் செய்யப்பட்டு, ராணுவத்திற்கு ரெக்ரூட் செய்யப்பட்ட புதிய அணிக்குத் தரப்பட்டது.


மேற்குப் போர் முனையில் இத்தனை நடந்துகொண்டிருக்க, இங்கு ஜெர்மனியின் உள் நிலத்தில், மேற்கு முனையில் எல்லாமே நன்றாக நடந்துகொண்டிருப்பதாகவும், தம் படையினர் ஜெயித்துக் கொண்டிருப்பதாகவும் பொய்ச் செய்தி பரப்பப்படுகிறது. ராணுவத்தில் ஆட்கள் குறைந்து விட்டதால், ராணுவத்திற்கு புதிய ஆட்கள் எடுக்கும் பணி தினசரி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. புதிதாக இணையும் இளைஞர்களுக்கு ராணுவ பயிற்சி அளிப்பதெற்கெல்லாம் அவகாசமில்லை. நேரே போர்முனைதான். ராணுவ ஜெனரல்களும், கமாண்டர்களும், அரசு உயர் அதிகாரிகளும் இளைஞர்களிடையே "தேசபக்தி" குறித்தும், போரில் கலந்துகொண்டு நாட்டின் கதாநாயகன்கள் ஆவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்றும் எழுச்சியுரை ஆற்றுகிறார்கள்.


"பால் பவ்மர்"-க்கு 17 வயது. பள்ளியிறுதி படித்துக் கொண்டிருக்கிறான். அரசியல்வாதிகளின் உணர்ச்சிமிகு உரைகள் கேட்டு, அவனுக்கும் ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக போரிட்டு, ஹீரோ ஆகவேண்டுமென்ற கனவு. அவனும், அவன் பள்ளி நண்பர்கள் ஆல்பர்ட், ஃப்ரான்ஸ், லுட்விக்-கும் ராணுவத்திற்கான ஆளெடுப்பில் கலந்துகொண்டு நாட்டின் இம்பீரியல் படையில் சேர்கிறார்கள். இராணுவச் சீருடையை கையில் வாங்கும்போது அவ்விளைஞர்களின் முகத்தில் அத்தனை உற்சாகம். ராணுவத்தில் சேர்ந்ததும் அவ்விளைஞர்கள் கொண்ட குழுவினர், வடக்கு ஃப்ரான்ஸில், "லா மல்மய்சன்" அருகே அமைக்கப்பட்டிருக்கும் அகழிப் போர் முனைக்கு அனுப்பப்படுகிறார்கள். கனவிலும் எண்ணிப் பார்த்திராத நரகத்தின் நிலத்தில் கால் பதிக்கிறார்கள் அவர்கள். அங்கு அவர்கள் காணும்/அனுபவப்படும் உலகம்...


*** 


ஆஸ்கார் விருதுகளுக்கான நாமினேஷன்களில் இடம்பெற்றிருக்கும் படங்களின் பட்டியலில், சமீபத்தில் பார்த்த படங்களில் மிகப் பிடித்த படம் "All Quiet on the Western Front". "Argentina 1985"-ஐ விட "EO" பிடித்திருந்தது. "EO"-வை விட எட்வர்டு பெர்கரின் "All Quiet on the Western Front" மிக மிகப் பிடித்திருந்தது. போரின் அவலங்களைக் காட்சிப்படுத்தியிருக்கும் சமீபத்திய மற்றொரு அபாரமான திரைப்படம் (1998-ல் வெளியான, டெர்ரன்ஸ் மாலிக்கின் "The Thin Red Line" சென்ற வருடம்தான் பார்த்தேன்; போர்ப்படம் என்றாலும் போருக்கு எதிரான கவிதை அது).     


"All Quiet on the Western Front" - 1929-ல் வெளியான "Erich Maria Remarque"-ன் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம். முழுப் படமும் செக் குடியரசின் பிராக்-ல் படமாக்கப்பட்டிருக்கிறது. சென்ற வாரம் நடைபெற்ற "பிரிட்டிஷ் அகாடமி திரை விருதுகள்" விழாவில் 14 பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்டு ஏழு விருதுகள் வென்றிருக்கிறது. அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஆஸ்கார் விருது விழாவில் ஒன்பது நாமினேஷன்கள் பெற்றிருக்கிறது.


அவசியம் பார்க்க வேண்டிய படம் (குழந்தைகளுக்கு வேண்டாம்).


***


ராணுவ முகாமில் "காட்", பால்-க்கு நண்பன். காட்-டிற்கு எழுதப் படிக்கத் தெரியாது. ஊரிலிருந்து வரும் மனைவியின் கடித்த்தை, பால்-ஐ படிக்கச் சொல்லி காட் கேட்கும் அந்தக் காட்சி அபாரமான ஒன்று. ராணுவ கமாண்டர்களின் தனிப்பட்ட ஈகோ போர்ச் சூழலில் எத்தகைய பாதகங்களை உருவாக்குகிறது, எத்தனை உயிர்ப்பலிகளுக்கு காரணமாகிறது என்பதை அழுத்தமாய் படம் பதிவு செய்திருக்கிறது. 


போரில், ஒரு நாள் கடுமையான கலவரச் சூழலில், உயிர்ப்பயத்தில், குண்டுத் தாக்குதலில் காயமடைந்து அடிபட்டு விழுந்து கிடக்கும் எதிரி ஃப்ரான்ஸ் நாட்டு சிப்பாய் ஒருவனை கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்ய நேர்கிறது பால்-க்கு. இறப்பின் கடைசி விநாடிகளில் அச்சிப்பாயின் தொண்டையிலிருந்து கிளம்பும் ஒலிகளைக் கேட்கச் சகிக்காமல் காதுகளை மூடிக்கொள்கிறான் பால். அவனும் தன்னைப்போலவே போரென்றால் என்னவென்றே தெரியாமல், போர் எதற்கு நடக்கிறது என்றே முழுதும் புரியாமல்தானே இங்கு வந்திருப்பான் என்ற நினைவு பால்-ஐத் தாக்கியதும் அவன் கண்களில் கண்ணீர். அருகிலிருக்கும் குட்டையிலிருந்து துணியில் தண்ணீர் நனைத்து இறந்து கொண்டிருக்கும் சிப்பாயின் வாயில் ஊற்றுகிறான். கழுத்துக் காயத்தை துணியால் கட்டிவிடுகிறான். அச்சிப்பாயின் கண்கள் ஏதோ இறைஞ்சுகின்றன; அவன் பாக்கெட்டிலிருந்து, அவன் மனைவியும், மகளும் இருக்கும் ஒரு நைந்து போன பழைய புகைப்படம் பால்-ற்கு கிடைக்கிறது...


வன்முறையையும், உயிர்ப்பலிகளையும் நோக்கி நகர்த்தும், மாய எல்லைகளைக் கட்டமைக்க நினைக்கும் எந்தக் கருத்தாக்கமும், பொய்க் கற்பிதங்களும் எப்போதுமே ஆபத்தானவைதான்.


வெங்கி

"All Quiet on the Western Front" (2022 German film)
Edward Berger
Netflix

Comments

Popular posts from this blog

"இவான் இலியிச்சின் மரணம்" - லேவ் தல்ஸ்தோய்

"கோயில் யானை" (நாடகம்) - ஓம்சேரி என்.என். பிள்ளை

"பிறப்பு" (நாவல்) - யு.ஆர். அனந்தமூர்த்தி