"The Story of the Weeping Camel" (2003 Mongolian Language DocuFilm)
மங்கோலியாவின் கோபி பாலைவனத்தில்...
ஒரு திரைப்படத்தின் சுவாரஸ்யத்திற்குக் கிஞ்சித்தும் குறையாத, அழகான, அற்புதமான ஒன்றரை மணி நேர ஆவண சினிமா
"The Sory of the Weeping Camel". அந்நிலப்பரப்பும் (Sergey Dvortsevoy-ன் "Tulpan"-ஐ நினைவூட்டியது), மனிதர்களும், அவர்களின் வாழ்வியலும், பண்பாடும், நாட்டுப்புற இசையும் பசுமையாய் மனதில் பதிந்து போயின. தவற விடக் கூடாத படம்.
புதிதாய் அறியும் நிலங்களும், சக மனிதங்களும், கலாச்சாரங்களும், வாழ்முறையும், அக்கற்றலின் இனிப்பும்தான் உலகத் திரைப்படங்களை சலிக்காது தேடித்தேடிப் பார்க்க வைக்கின்றன. அறிதலையும், கற்றலையும், மன ஆழத்தில் ஏதோ ஒன்றுடன் ஒத்திசைந்த உணர்வினையும், இலக்கிய வாசிப்பின் சுவையையும் அளிக்கும் படங்களைப் பார்க்கப் பார்க்க வியப்பும், பிரமிப்பும் கூடிக்கொண்டேதான் செல்கின்றன. "Lunana: A Yak in the Classroom" படத்தின் காணனுபவத்தை முகநூலில் பகிர்ந்து கொண்டபோது, நண்பர் கணபதி சுந்தர், மேலும் இரு பூட்டானியப் படங்களையும், ஒரு Finnish படத்தையும், ஒரு ஜெர்மன் படத்தையும், "The Story of Weeping Camel"-ஐயும் பார்க்கப் பரிந்துரைத்திருந்தார். சிறப்பான பரிந்துரைகள். ஷிவா, சதீஷ், சச்சின், முத்து, மணி சார், எங்களின் கேரள சர்வதேச திரைவிழா வாட்ஸ்அப் குழு நண்பர்கள் என பல நண்பர்களின் பரிந்துரைகள் இல்லையென்றால் மிகச் சிறந்த உலகப்படங்கள் பலவற்றைத் தவறவிட்டிருப்பேன் என்றுதான் நினைக்கிறேன். நண்பர்களுக்கு அன்பும், நன்றியும்.
***
தெற்கு மங்கோலியாவின் கோபி பாலைவனப் பகுதி. நான்கு தலைமுறைகள் கொண்ட நாடோடி மேய்ப்பர் குடும்பம் ஒன்று பாலை நடுவே கூடாரங்கள் அமைத்து வசிக்கிறது. அவர்களின் மந்தை, ஆடுகளும், மங்கோலிய பாக்ட்ரியன் ஒட்டகங்களும் கொண்டது. குடும்பத்தின் மூத்த தலைமுறை தம்பதிகள், "Janchiv" கொள்ளுத் தாத்தாவும், "Chimed" கொள்ளுப் பாட்டியும். அடுத்த தலைமுறை, "அம்கா" தாத்தாவும், "ஜெவெல்" பாட்டியும். மூன்றாம் தலைமுறை இளம் தம்பதியர் "Ikhee"-க்கும், "Odgoo"-விற்கும் மூன்று குழந்தைகள். மூத்தவன் சிறுவன் "Dude"-ற்கு எட்டு/ஒன்பது வயதிருக்கும்; இரண்டாவது பையன் "Ugna"-விற்கு நான்கு வயது. கடைக்குட்டி இரண்டு வயது "Guntee".
பாலையின் வசந்தகாலப் பருவத்தில், கருவுற்றிருந்த ஒட்டகங்கள் ஒவ்வொன்றாக குட்டி போடுகின்றன. கடைசி தாய் ஒட்டகத்திற்கு அதுதான் முதல் பிரசவம். இரண்டு நாட்கள் சிரமப்பட்டு குட்டி ஈனுகிறது. பிறந்த குட்டி அபூர்வமான வெள்ளை நிறம். தாய், அந்த வெள்ளை நிறக் குட்டிக்குப் பால் தர மறுக்கிறது. அதோடு ஒட்டாமல் புறக்கணிக்கிறது. மற்ற குட்டிகள், தங்கள் தாய்களோடு சந்தோஷமாக இருப்பதைப் பார்க்கும் வெண்குட்டி சோகமுறுகிறது. தாய்ப்பாலில்லாமல் உடல் மெலிகிறது. அதன் அழுகுரல் கேட்டு அம்மேய்ப்பர் குடும்பம் கவலைக்குள்ளாகிறது.
தாய்க்கும், குட்டிக்கும் இணக்கம் ஏற்படுத்த வேண்டி, தங்களின் வழிபாட்டிடத்தில், இரு திபெத்திய லாமாக்களை வரவழைத்து, "த்விஜ" கம்பத்தில் பிரார்த்தனைக் கொடியேற்றி, தாய் ஒட்டகம், குட்டியின் உருவங்களை வெண்ணெய் கலந்த மாவினால் செய்து வைத்து, மந்திரங்கள் ஓதி வழிபடுகிறார்கள் குடும்பத்தினர். தாயின் குணத்தில் மாற்றமில்லாமல் போக, பெரியவர்கள், ஒட்டகங்களுக்கு வழக்கமாகச் செய்யும் "ஹூஸ்" சடங்கைச் செய்து பார்க்கலாம் என முடிவெடுக்கிறார்கள்.
"ஹூஸ்", ஒரு வயலின் இசைக் கலைஞரைக் கொண்டு (வயலினை ஒத்த இரு தந்தி இசைக் கருவி) மங்கோலியாவின் ஒரு குறிப்பிட்ட நாட்டுப்புற தாலாட்டு இசைப்பாடலை ஒட்டகத்திற்காக இசைக்கச் செய்வது. பக்கத்திலிருக்கும் கிராமத்திற்குச் சென்று வயலின் இசைக் கலைஞரை அழைத்து வர, சிறுவர்கள் "Dude"-ம், "Ugna"-ம் இரண்டு ஒட்டகங்களில் பயணிக்கிறார்கள். தாத்தா "அம்கா" தனக்கு கடையிலிருந்து பேட்டரிகள் வாங்கி வருமாறு சொல்கிறார்.
உறவுக்காரப் பாட்டியை அழைத்துக்கொண்டு, வணிகச் சந்தைப் பகுதியிலிருக்கும் கூட்டுறவு சங்கத்தின் இசைப்பயிற்சி அறையில், வயலின் கலைஞரைச் சந்திந்து தங்களின் மந்தைக் குடியிருப்புக்கு ஹூஸ் சடங்கிற்காக வரவேண்டுமென்று வேண்டுகோள் வைக்கிறார்கள். அவரும் சம்மதிக்கிறார். அவர்களை முன்னே போகச் சொல்லி, பின்னால் பைக்கில் வருவதாகச் சொல்கிறார். கடையில் தாத்தாவிற்கு பேட்டரிகள் வாங்கிக் கொள்கிறான் "Dude". கடையை வேடிக்கை பார்க்கும் "Ugna", தொலைக்காட்சியின் விலையை விசாரிக்கிறான். அவனுக்கு எப்படியாவது ஒரு தொலைக்காட்சி வாங்கவேண்டுமென்பது விருப்பம். தாத்தாதான் மறுத்துக் கொண்டேயிருக்கிறார்.
வயலின் கலைஞர் தன் வாத்தியத்துடன் வருகிறார். தாய் ஒட்டகத்திற்கும், வெண் குட்டிக்கும் அருகில் குடும்பத்தினர் அனைவரும் சூழ்ந்து அமர்கிறார்கள். "Odgoo" தாயைத் தடவிக் கொடுத்தபடி, மங்கோலியாவின் பாரம்பரிய இசைத் தாலாட்டுப் பாடலைப் பாட, கலைஞ்ர் இசைக்கிறார். அந்த இசை கேட்டு நெகிழ்ந்து கண்ணீர் வடிக்கிறது தாய் ஒட்டகம். முதன்முறையாக தன் குட்டியை தன்னிடம் பால் குடிக்க அனுமதிக்கிறது. தாயும் சேயும் இணைந்தது கண்டு குடும்பத்தினர் அனைவருக்கும் மகிழ்ச்சி. அன்றிரவு இசையுடன் வீட்டில் விருந்து. "Ugna"-விற்கு சந்தோஷப் பரிசாக வீட்டில் தொலைக்காட்சி வாங்கப்படுகிறது.
***
எளிய, ஆர்ப்பாட்டமில்லாத, உரையாடல்கள் குறைவான, இயல்பின் அமைதியில் நகரும் படம்தான். ஆனால் அது தரும் மன நிறைவும், நெகிழ்வும் அலாதியானது. உலகப் படங்களில்தான் எத்தனை நிலப்பரப்புகள்! எத்தனை வாழ்க்கைகள்! எத்தனை பண்பாடுகள்!... இனிது இனிது வாழ்வு இனிது!
வெங்கி
"The Story of the Weeping Camel"
(2003 Mongolian Language DocuFilm)
Byambasuren Davaa & Luigi Falorni
Comments
Post a Comment