பாலுவின் "வீடு" திரைப்படம்...

 அம்மாவின் வீடு

1999 ஃபெப்ரவரியின் ஒரு நண்பகல் உச்சிப் பொழுதில், வெயில் சுட்டெரித்த ஒரு மதியத்தில், திருமங்கலம் ஆனந்தா தியேட்டர் அருகிலிருந்த சார்பதிவாளர் அலுவலகக் கட்டிடத்திற்கு வெளியே வேப்ப மரத்தடியில், நான் தாத்தாவின் தோளில் சாய்ந்து விக்கி விக்கி அழுதுகொண்டிருந்தேன். தாத்தா முதுகு தடவி “ஏடாகப்பா...ஏடாகப்பா” (”அழாதப்பா...அழாதப்பா”) என்று தேற்றிக் கொண்டிருந்தார். என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை. திருமங்கலத்தில், மம்சாபுரம் போகும் வழியில், குருவி போல் பத்து வருஷமாய் கொஞ்சம் கொஞ்சமாய் பணம் சேர்த்து, அம்மா ஆசை ஆசையாய் வாங்கிய இரண்டு செண்ட் நிலத்தை விற்பதற்காக, உள்ளே சார்பதிவாளர் முன்னால் கையெழுத்துப் போடும்போது, அம்மாவின் முகம் மனதில் வந்து, வெடித்து வந்த அழுகையைக் கட்டுப்படுத்தி, வெளியில் ஓடி வந்து மரத்தடியில் நின்று கொண்டிருந்த தாத்தாவைக் கட்டிக் கொண்டு அழுதேன்.
ஒன்பதாம் வகுப்பும், பத்தாம் வகுப்பும் படிக்கையில் நான் திருமங்கலம் பி.கே.என் ஸ்கூலில் ஹாஸ்டலில் இருந்தேன். தம்பிகள் ஓடைப்பட்டியிலிருந்து டே ஸ்காலராக பஸ்ஸில் வந்து போய்க் கொண்டிருந்தார்கள். அம்மா கிராமத்தில் வளர்ந்த பெண். ஒன்பதாவது வரை படித்திருந்தார். 15 வயதில் அப்பாவுடன் திருமணமாகி, அடுத்த பதினோரே ஆண்டுகளில், அம்மாவின் 26 வயதில் அப்பா திடீரென்று இறக்க, அம்மா மூன்று பையன்களை வைத்துக்கொண்டு திக்குத் தெரியாமல் நின்றார். அப்பா அரசுப் பள்ளி ஆசிரியர் என்பதால், அம்மாவிற்கு செங்கப்படை அரசுப் பள்ளியில், அலுவலக உதவியாளராக வேலை கிடைத்தது. நான் பதினோராம் வகுப்பு வந்ததும், திருமங்கலத்திலேயே வாடகைக்கு வீடு பார்த்து, எல்லோரும் ஓடைப்பட்டியிலிருந்து திருமங்கலத்திற்கு வந்தோம். அடுத்த இரண்டு மூன்று வருடங்களில், ஏழெட்டு வாடகை வீடுகளாவது மாறியிருப்போம். பணப் பிரச்சனை. அப்போது அம்மாவின் மனதில் வந்த ஆசை/கனவுதான் சின்னதாய் இடம் வாங்கி, சொந்தமாய் சின்னதாய் வீடு கட்டிக் கொண்டாலென்ன?. அதன்பின் வாங்கியதுதான் அந்த இரண்டு செண்ட் நிலம்.
அம்மா, தன் நாற்பதாவது வயதில், 1999 ஜனவரி ஒன்று, புத்தாண்டு தினத்தன்று வைகறையில் இரண்டு மணிக்கு எங்களை விட்டுப் பிரிந்தார். அன்றிலிருந்து அடுத்த சில மாதங்கள் உடலும் மனமும் அதிர்ச்சியில் உறைந்து, ஏதோ கனவுலகில் நடமாடுவது போலவே இருந்தது. எங்கிருக்கிறோம், என்ன செய்கிறோம் என்பதே பிரக்ஞையில் இல்லை. திடீர் திடீரென்று உடல் விதிர்த்து மனம் கலங்கி கண்களில் தண்ணீர் வரும். சுற்றிலும் ஏதோ நடந்து கொண்டிருந்தது. யார் யாரோ “நீ மூத்த பையன். நீயே இப்படி இருந்தா எப்படி? தம்பிங்க ரெண்டு பேருக்கும் யாரு ஆறுதல் சொல்றது?” என்று அவ்வப்போது சொல்லிக் கொண்டிருந்தார்கள். இரண்டாம் தம்பி மூர்த்தியை நினைத்ததும், இன்னும் மனம் கலங்கியது. மூர்த்தி, அம்மா செல்லம். மூர்த்தி பெரியகுளத்தில் தோட்டக்கலை இளங்கலை படித்துக் கொண்டிருந்தான். அம்மாவின் இழப்பை அவன் எப்படித் தாங்கப் போகிறானோ என்று பயமாக இருந்தது. உடன் படித்த நண்பர்கள்தான் அன்று பெரியகுளத்திலிருந்து அவனைக் கூட்டிக்கொண்டு வந்திருந்தார்கள். அவன் நண்பர்களை எனக்குப் பரிச்சயம் உண்டு. அவன் வகுப்புத் தோழி யமுனாவைப் பார்த்ததும் கை பிடித்துக்கொண்டேன். கண்களில் நீர் வழிய “மூர்த்தியப் பாத்துக்கோங்க யமுனாம்மா” என்று திக்கித் திணறிச் சொன்னேன்.
முதல் தம்பி சத்யன், மதுரையிலிருந்து மேலூர் போகும் வழியில், ஒத்தக்கடை அருகே, கே.எம். கல்லூரியில் ஃபார்மஸி படித்துக் கொண்டிருந்தான். திருமங்கலம் வாடகை வீட்டைக் காலி செய்து விட்டு, ஒத்தக்கடை திருமோகூர் ரோட்டில், வாடகைக்கு வீடு எடுத்து தாத்தா பாட்டியுடன் அவன் தங்கிக் கொள்வதாக முடிவெடுத்த பிறகுதான், திருமங்கலத்தில் வாங்கிய நிலத்தை இனிமேல் யாரும் பார்த்துக்கொள்ள முடியாது என்று உணர்ந்து, சத்யன், மூர்த்தி படிப்பதற்கும் பணம் வேண்டியிருந்ததால், அம்மா திருமங்கலத்தில் வீடு கட்டிக்கொள்ள வாங்கிய அந்தக் கனவு நிலத்தை விற்றோம்.
***
”வீடு” முதலில் பார்த்தது திருமங்கலம் பானு தியேட்டரில், நண்பன் அப்பாஸுடன் சேர்ந்து. படம் பார்த்துவிட்டு விவரிக்க முடியாத உணர்வுக் கொந்தளிப்பில், பரவசத்தில் அம்மாவிடம் வந்து ஒவ்வொரு காட்சியையும் விவரித்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது.
ராஜாவின் புல்லாங்குழலோடு, முருகேஷ் தாத்தா செங்கற் சுவரைத் தடவுவதையும், மங்காவோடு சாப்பிடுவதற்கு முன்னால், கைகழுவிவிட்டு சேலையில் கை துடைத்துக் கொள்ளும் சுதாவையும், சிமெண்ட் திருடும் காண்ட்ராக்டரிடம், சுதா கண்கலங்கி “இங்க பாருங்க, அங்க இங்க கடன் வாங்கி கஷ்டப்பட்டுத்தான் இந்த வீடு கட்டிட்டிருக்கோம்” என்று சொல்லி குரல் உடைவதையும், ஸ்கூல் ஃபங்ஷனுக்காக சர்ப்ரைஸாக பச்சை பட்டுப் பாவாடை வாங்கி, சுதா, தங்கை இந்துவிற்குத் தர, இந்து கண்கலங்கும் போது அணைத்துக்கொண்டு “சும்மாயிரு” என்று சுதா தேற்றுவதையும், பச்சை பட்டுப் பாவாடை, பச்சை ரவிக்கை, வெண்ணிற தாவணி அணிந்து, தலையில் பூ வைத்து ரெடியானவுடன், இந்துவிடம் சுதா “போய் தாத்தா கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிட்டுப் போ” என்று சொல்ல, “முதல்ல நீ நில்லு. உன்கிட்ட ஆசீர்வாதம் வாங்கிக்கறேன்” என்று இந்து, அக்காவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவதையும், முருகேஷ் தாத்தா கோபியிடம் “சுதாவ நீ கல்யாணம் பண்ணிப்பல்ல. இந்துவும் உனக்கு ஒரு தங்கச்சி மாதிரிதான். அவளுக்கும் நீதான் கல்யாணம் பண்ணி வைக்கணும்” என்று சொல்வதையும், மங்காவிடம் தாத்தா “யாரு பெத்த புள்ளயோ, ஒத்தாசையா நின்னு கட்டிக் குடுத்துருக்க” என்று சொல்லி கலங்குவதையும்...அம்மாவிடம் சொல்லிச் சொல்லி மாய்ந்து போனேன்.
அம்மா இறந்தபிறகு, “வீடு” படம் டி.வி-யில் போட்டால் கூட, பார்ப்பதற்கு பயமாக இருந்தது. படம் அம்மாவின் நினைவுகளை எழுப்பி நிதானமிழக்கச் செய்தது. சுதா அர்ச்சனாவைப் பார்க்கும் போதெல்லாம் அம்மாவைப் பார்ப்பது போலவே இருக்கும்.
பாலு...பாலு...என்னை என்ன செய்தீர்கள் பாலு? உங்களுக்கும், ராஜாவிற்கும் நான் பட்டிருக்கும் ஜென்மக் கடனை எப்படித் தீர்க்கப் போகிறேன் பாலு?
வெங்கி
"Veedu" - "வீடு” (1988 Indian - Tamil)

Comments

Popular posts from this blog

"இவான் இலியிச்சின் மரணம்" - லேவ் தல்ஸ்தோய்

"கோயில் யானை" (நாடகம்) - ஓம்சேரி என்.என். பிள்ளை

"பிறப்பு" (நாவல்) - யு.ஆர். அனந்தமூர்த்தி