பாலுவின் "வீடு" திரைப்படம்...
அம்மாவின் வீடு 1999 ஃபெப்ரவரியின் ஒரு நண்பகல் உச்சிப் பொழுதில், வெயில் சுட்டெரித்த ஒரு மதியத்தில், திருமங்கலம் ஆனந்தா தியேட்டர் அருகிலிருந்த சார்பதிவாளர் அலுவலகக் கட்டிடத்திற்கு வெளியே வேப்ப மரத்தடியில், நான் தாத்தாவின் தோளில் சாய்ந்து விக்கி விக்கி அழுதுகொண்டிருந்தேன். தாத்தா முதுகு தடவி “ஏடாகப்பா...ஏடாகப்பா” (”அழாதப்பா...அழாதப்பா”) என்று தேற்றிக் கொண்டிருந்தார். என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை. திருமங்கலத்தில், மம்சாபுரம் போகும் வழியில், குருவி போல் பத்து வருஷமாய் கொஞ்சம் கொஞ்சமாய் பணம் சேர்த்து, அம்மா ஆசை ஆசையாய் வாங்கிய இரண்டு செண்ட் நிலத்தை விற்பதற்காக, உள்ளே சார்பதிவாளர் முன்னால் கையெழுத்துப் போடும்போது, அம்மாவின் முகம் மனதில் வந்து, வெடித்து வந்த அழுகையைக் கட்டுப்படுத்தி, வெளியில் ஓடி வந்து மரத்தடியில் நின்று கொண்டிருந்த தாத்தாவைக் கட்டிக் கொண்டு அழுதேன். ஒன்பதாம் வகுப்பும், பத்தாம் வகுப்பும் படிக்கையில் நான் திருமங்கலம் பி.கே.என் ஸ்கூலில் ஹாஸ்டலில் இருந்தேன். தம்பிகள் ஓடைப்பட்டியிலிருந்து டே ஸ்காலராக பஸ்ஸில் வந்து போய்க் கொண்டிருந்தார்கள். அம்மா கிராமத்தில் வளர்ந்த பெ...